செய்திகள்
கைது

கருமந்துரையில் செம்மரக்கட்டை புரோக்கர்கள் 3 பேர் கைது

Published On 2019-10-23 06:50 GMT   |   Update On 2019-10-23 06:50 GMT
சேலம் மாவட்டம் கருமந்துரையில் செம்மரக்கட்டை புரோக்கர்கள் 3 பேரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆத்தூர்:

ஆந்திர மாநிலம் திருப்பதி மலை பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்துவதற்கு சேலம் மாவட்டத்தில் இருந்து கூலி தொழிலாளர்கள் அனுப்பப்படுவதாகவும், அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி இந்த செயலை புரோக்கர்கள் செய்வதாகவும் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தீபாகனிக்கர், செம்மர கட்டை புரோக்கர்களை கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரமூர்த்தி, கருமந்துரை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் கருமந்துரை கிளாக்காடு பகுதியை சேர்ந்த தீர்த்தன் (வயது 31), தாள்வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் (35), செல்லங்குறிச்சி, வெங்கட்ட வளவு பகுதியை சேர்ந்த ராமர் (34) ஆகியோர் செம்மரம் வெட்டுவதற்கு ஆட்களை அனுப்பும் புரோக்கர்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேரும் போலீசாரிடம் சிக்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு செம்மரம் கடத்தல் விவகாரத்தில் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக பூச்சி என்பவர் கருமந்துரை மலை பகுதியில் தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் புரோக்கர் தீர்த்தனுக்கு தொடர்பு உள்ளது என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிக பணம் தருவதாக கூறி அப்பாவி கூலி தொழிலாளர்களை செம்மரக்கட்டை வெட்டுவதற்கு அனுப்பினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

Tags:    

Similar News