செய்திகள்
பாம்பு

வத்தலக்குண்டு அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

Published On 2019-10-18 12:00 GMT   |   Update On 2019-10-18 12:00 GMT
பராமரிப்பின்றி காணப்படும் வத்தலக்குண்டு அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு யூனியன் அலுவலகம் பின்புறம் சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நாகலாபுரத்தில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கட்டிடம் 1980-ம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் பின்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கட்டிடம் இடிந்து எந்த நேரமும் கீழே விழும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில் திடீரென வி‌ஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்பு உள்ளே புகுந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் நான்கு புறமும் தெறித்து ஓடினர்.

அக்கம் பக்கத்தினர் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்தனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை அடிக்கடி பெயர்ந்து விழுகிறது.

இதனால் குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது. அருகிலேயே முட்புதர்கள் இருப்பதால் பாம்பு உள்பட வி‌ஷ ஜந்துக்கள் உள்ளே புகுந்து விடுகின்றன. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப அச்சமடைந்து வருகின்றனர்.

இதேபோல் வத்தலக்குண்டு வி.ஏ.ஓ. அலுவலகமும் பராமரிக்கப்படாததால் இடியும் அபாயம் உள்ளது.

Tags:    

Similar News