செய்திகள்
கோப்பு படம்

ஒருதலை காதல் விவகாரத்தில் தொழிலாளி மீது தாக்குதல் - வாலிபரின் தந்தை கைது

Published On 2019-10-15 09:46 GMT   |   Update On 2019-10-15 09:46 GMT
வடசேரியில் மகளை திருமணம் செய்து கொடுக்காததால் தந்தையும், மகனும் சேர்ந்து தொழிலாளியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

வடசேரி கிருஷ்ணன் கோவில், சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). கூலி தொழிலாளி.

இவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அதேப் பகுதியை சேர்ந்த டிப்ளமோ மாணவர் சந்துரு என்பவர் ஒருதலையாக காதலித்து வந்தார்.

காதல் விவகாரம் சந்துருவின் தந்தைக்கு தெரியவந்தது. இதையடுத்து சந்துருவின் தந்தை மணிகண்டன் தனது மகனுக்கு ராமச்சந்திரனிடம் சென்று அவரது மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், சந்துரு இருவரும் சேர்ந்து ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கினார்கள். அரிவாளாலும் வெட்ட முயன்றனர். ராமச்சந்திரன் விலகிக்கொண்டதால் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதையடுத்து தந்தை, மகன் இருவரும் ராமச்சந்திரனை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காயம் அடைந்த ராமச்சந்திரன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து ராமச்சந்திரன் வடசேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அனில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தினார். இதையடுத்து மணிகண்டன், சந்துரு ஆகியோர் மீதும் பிரச்சினைக்கு தூண்டுதலாக இருந்த ஆறுமுகத்தின் மனைவி சூரியா மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தலைமறைவாகி உள்ள சந்துரு, சூரியா ஆகிய இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
Tags:    

Similar News