செய்திகள்
சீன அதிபரை வரவேற்ற பிரதமர் மோடி

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்றார் பிரதமர் மோடி

Published On 2019-10-11 11:40 GMT   |   Update On 2019-10-11 11:45 GMT
கிண்டியில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
சென்னை:

இந்தியா-சீனா இடையே நல்லுறவை மேம்படுத்த கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தார்.
 
இதன் தொடர்ச்சியாக சீன அதிபர் இந்தியா வந்து பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச இரு நாட்டு அதிகாரிகளும் முடிவு செய்து கடந்த ஒரு மாதமாக ஏற்பாடுகள் செய்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தார். சீன தலைநகர் பிஜிங்கில் இருந்து இன்று காலை தனி சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்.

விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய வழக்கப்படி அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

சீன அதிபரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு விமான நிலைய பகுதியில் நடந்த கண்கவர் கலை நிகழ்ச்சியை சீன அதிபர் பார்வையிட்டார். சுமார் 10 நிமிடங்கள் சீன அதிபர் அங்கு கலை நிகழ்ச்சி கண்டு ரசித்தார்.

அதன்பின், அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஐ.சி.டி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார். 4 மணி வரை அவர் அந்த நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.



இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள ஓட்டலில் இருந்து சாலை மார்க்கமாக காரில் மாமல்லபுரம் புறப்பட்டு சென்றார். 

சென்னையில் இருந்து புறப்பட்ட சீன அதிபருக்கு வழிநெடுக 34 இடங்களில் மேளதாளங்கள், ஆட்டம் பாட்டங்களுடன் கோலாகல வரவேற்புகள் அளிக்கப்பட்டது.

சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங்கை வேட்டி, சட்டையில் வந்த பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார்.



அர்ச்சுனன் தபசு பகுதியை ஜிங்பிங்குக்கு சுற்றிக் காட்டிய மோடி, அங்குள்ள சிற்பக்கலையின் தொன்மை மற்றும் சிறப்பு குறித்து ஜின்பிங்குக்கு விளக்கி கூறினார்.
Tags:    

Similar News