செய்திகள்
தக்காளி

அய்யலூர் சந்தையில் தக்காளி விலை திடீர் உயர்வு

Published On 2019-09-25 09:07 GMT   |   Update On 2019-09-25 09:07 GMT
வெளியூரில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் அய்யலூர் சந்தையில் விலை திடீரென உயர்ந்தது.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள கொம்பேறிப்பட்டி, தென்னம்பட்டி, வடமதுரை, அய்யலூர், பஞ்சந்தாங்கி, பாலார்தோட்டம், புத்தூர், சுக்காம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து அதிகரிப்பால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த கவலையில் இருந்து வந்தனர். மழை பெய்த போதிலும் தக்காளி நடவு பணியிலும், அறுவடை பணியிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

அய்யலூர் சந்தையில் நேற்று திடீரென தக்காளி விலை உயர்ந்தது. 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.180 முதல் ரூ.210 வரை வாங்கப்பட்டது. கிலோ ரூ.5 என இருந்த நிலையில் திடீரென ரூ.8 முதல் ரூ.10 வரை அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அய்யலூர் சந்தைக்கு வெளியூர்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்தது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து மட்டுமே தக்காளி கொண்டு வரப்படுகின்றன.

அந்தந்த பகுதிகளில் விளையும் தக்காளி சில வியாபாரிகளால் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை குறைந்த தக்காளி தற்போது விவசாயிகளுக்கு கை கொடுத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags:    

Similar News