செய்திகள்
கோப்பு படம்

8-ம் வகுப்பு படித்தவர் நடத்திய கிளினீக்குக்கு சீல் வைப்பு - தப்பி ஓடிய போலி டாக்டர்

Published On 2019-09-25 05:05 GMT   |   Update On 2019-09-25 05:05 GMT
சேலம் அருகே 8-ம் வகுப்பு படித்தவர் நடத்திய கிளினீக்குக்கு சீல் வைத்த அதிகாரிகள் தப்பி ஓடிய போலி டாக்டரை தேடி வருகின்றனர்.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டாரத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளை கலெக்டர் ராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் சுகாதார பணிகளை ஆய்வு செய்தபோது, அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே பல ஆண்டுகளாக கிளினீக் வைத்து முறையாக மருத்துவம் படிக்காமலேயே முருகன் (வயது 47) என்பவர் போலி டாக்டராக ஆங்கிலம் மருத்துவம் செய்து வருகிறார் என அப்பகுதி மக்கள் கூறினர்.

இதையடுத்து கலெக்டர் ராமன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உடனடியாக கிளினீக்குக்கு சென்று ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார். இதை கேள்விப்பட்டதும் முருகன், தனது கிளினீக்கை பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் அதிகாரிகள், பூட்டியிருந்த கிளினீக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பார்வையிட்டனர். அங்கு தடை செய்யப்பட்ட மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், அதிக டோஸ் உள்ள ஆங்கில மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் போன்றவைகள் இருந்தன. விசாரணையில், அதே ஊரை சேர்ந்த முருகன் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார் என்பது தெரியவந்தது.

இது பற்றி கலெக்டர் ராமனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர், கிளினீக்குக்கு வந்து போலி டாக்டர் பயன்படுத்திய மருந்துகளை பார்வையிட்டார். இதையடுத்து சரக்கப்பிள்ளையூர் மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையிலான ஊழியர்கள் அங்கிருந்து அனைத்து மருந்து பொருட்கள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்து, கிளினீக்கை பூட்டி சீல் வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சுகாதாரதுறை சார்பில் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார், தப்பி ஓடிய போலி டாக்டரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News