செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-09-19 03:13 GMT   |   Update On 2019-09-19 03:13 GMT
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்றும், இடைநிற்றல் என்பது வராது என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை:

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் 5, 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதை முதல்-அமைச்சரோடு ஆலோசனை செய்து 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டு அரசாணையும் வெளியானது.

இந்த 3 ஆண்டுகளுக்கு பழைய முறையே தொடரும். அதன்பிறகு தான் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில்கொண்டு, கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு வேண்டிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனும், மாணவர்களின் கற்றல் திறனும் மேம்படுத்துவதற்காக தான் இந்த 3 ஆண்டு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.



இந்த பொதுத்தேர்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அனைவரும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு எழுதி தான் அந்த நிலையில் இருக்கிறார்கள். இன்றைய நிலையில் பார்க்கும்போது, உலக நாடுகளில் இருக்கும் கல்வி முறைக்கும், நம்முடைய கல்வி முறைக்கும் இடைவெளிகள் அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்து மத்திய அரசு பணிகள் மேற்கொள்கிறது.

இது பெற்றோரும், மாணவர்களும் வரவேற்கத்தக்க ஒன்று. இதில் இடைநிற்றல் என்பது வராது. மாணவர்களை நல்ல கல்வியாளர்களாக கொண்டு வருவதுதான் நம்முடைய நோக்கம். மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயருவதற்காக தான் இந்த பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News