செய்திகள்
கைது

சட்ட நகலை எரிக்க முயற்சி: கோவை - திருப்பூரில் 134 விவசாயிகள் கைது

Published On 2019-09-18 10:17 GMT   |   Update On 2019-09-18 10:17 GMT
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சட்ட நகலை எரிக்க முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க நில அளவீடு செய்ய வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் 1885-ம் ஆண்டு விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது. இந்த சட்ட நகலை எரிக்கும் போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் மதுசூதனன், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் தங்கராஜ், விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் விவசாயிகள் 1885-ம் ஆண்டு சட்ட நகலை எரிப்பதற்காக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் திரண்டனர். அவர்கள் சட்ட நகலை கிழித்து எறிந்தனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். 34 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் சட்ட நகலை எரித்து போராட்டம் நடத்த போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனையும் மீறி சட்ட நகலை எரிப்போம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு திரண்டு வந்த 30 பெண்கள் உள்பட 100 விவசாயிகள் சட்ட நகலை எரிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். தடையை மீறி சட்ட நகலை எரிக்க முயன்ற 30 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனால் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News