செய்திகள்
வைகை அணை

தேனி மாவட்டத்தில் விடிய விடிய மழை- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-09-16 17:09 GMT   |   Update On 2019-09-16 17:09 GMT
தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் வைகை உள்பட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கூடலூர்:

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது. மாலை நேரத்திற்கு பின்பு சாரலாக தொடங்கி விடிய விடிய பெய்தது. தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேவதானப்பட்டி, உத்தமபாளையம், கம்பம், லோயர்கேம்ப், போடி, கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குமுளி, லோயர்கேம்ப், கம்பம் பகுதியில் இன்று காலையும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1407 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழையே பெய்ததால் அணைக்கு 696 கன அடி நீர் மட்மே வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1700 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 129.15 அடி.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 35.40 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 85.28 அடியாக உள்ளது. 7 கன அடி நீர் வருகிற நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 10.8, வைகை அணை 2.6, மஞ்சளாறு 5, சோத்துப்பாறை 22 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News