செய்திகள்
கைது

சோழவந்தான் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய 7 பேர் கைது

Published On 2019-09-16 08:29 GMT   |   Update On 2019-09-16 08:29 GMT
சோழவந்தான் அருகே அனுமதி இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்திய 4 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயில் ஜல்லிக்கட்டு விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் பங்கேற்பதற்காக பண்ணையான், நடு முதலைக்குளம், சமயநல்லூர், அலங்காநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மினி வேன் மூலம் காளைகள் அழைத்து வரப்பட்டன. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மாடுபிடி வீரர்களும் வந்திருந்தனர்.

ஜல்லிக்கட்டு விழா நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறப்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது நெடுங்குளம் கிராம கண்மாயில் ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெடுங்குளம் கிராம நிர்வாக அலுவலர் குரு பாண்டியன் 21 பேர் மீது புகார் கொடுத்தார். இதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப் பதிவு செய்து அம்மச்சியாபுரம் பால் பாண்டி, முதலைக்குளம் மணிகண்டன், அலெக்ஸ் பாண்டி, மேலமட்டை யானை சேர்ந்த ஒய்யாணன், சமயநல்லூர் முருகவேல்ராஜன், அலங்காநல்லூர் சதீஷ்குமார், ராம்குமார் ஆகிய 7 பேரை கைது செய்தார். மற்றவர்களை தேடி வருகின்றனர். காளைகள் அழைத்து வரப்பட்ட 4 வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News