செய்திகள்
கொள்ளை

ஓடும் ரெயிலில் நாகர்கோவில் என்ஜினீயர் மனைவியிடம் 33 பவுன் நகை கொள்ளை

Published On 2019-09-04 10:54 GMT   |   Update On 2019-09-04 10:54 GMT
ஓடும் ரெயிலில் நாகர்கோவிலை சேர்ந்த என்ஜினீயர் மனைவியிடம் இருந்து 33 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள சூரங்குடியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 40).

இவரது கணவர் செந்தில் குமார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெங்களூருவில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சொந்த ஊரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக கிருஷ்ணவேணி தனது 2 மகன்களுடன் ரெயில் மூலம் பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். அவர்கள் குளிர் சாதன வசதி செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார்.

அப்போது கிருஷ்ணவேணி தனது கைப்பையில் 33 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணம் வைத்திருந்தார். இன்று காலை 8.30 மணி அளவில் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

அப்போது கிருஷ்ணவேணி தனது கைப்பையை தேடியபோது அது மாயமாகி இருந்தது தெரிய வந்தது. யாரோ மர்ம நபர் 33 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் ரொக்கப்பணத்துடன் அந்த கைப்பையை கொள்ளையடித்துச் சென்றிருந்தார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் 7½ லட்சம் ஆகும்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணவேணி நாகர்கோவில் ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News