செய்திகள்
பொன்னேரி தொடர் வழிப்பறி

பொன்னேரி பகுதியில் தொடர் வழிப்பறியால் கிராம மக்கள் அச்சம்

Published On 2019-09-03 07:10 GMT   |   Update On 2019-09-03 07:10 GMT
பொன்னேரி பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்களால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பொன்னேரி:

பொன்னேரி அருகே ரெட்டி பாளையம், வேலூர், மனோபுரம், ஆலாடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பலமுறை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் கடந்த 30-ந்தேதி அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேச்சு வார்த்தை நடத்திய போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை முக்கிய குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. தொடர்ந்து அப்பகுதியில் வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது.

நேற்று இரவு காட்டூர் கிராமத்தை சேர்ந்த அருள் என்பவர் பொன்னேரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தார். மனோபுரம் கிராமம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் அருளை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி சம்பவங்களால் கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:-

வேலைக்கு சென்றுவிட்டு பெண்கள் தனியாக வர முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் ஆண்கள் செல்லும் போது கொள்ளை கும்பல் வழிமறித்து செல்போன், பணம், இருசக்கர வாகனத்தை பறித்து சென்று விடுகின்றனர்.

பணம் இல்லை என்றால் முகத்தியும், அரிவாளால் வெட்டியும் அனுப்புகின்றனர். இதுவரை 10-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவம் நடந்துள்ளன. வியாபாரிகளை மறித்து பணம் பறிக்கின்றனர்.

ஆரணி ஆற்றின் கரையோரம் முட் புதர்களில் பதுங்கி இருந்து திடீரென தாக்கிவிட்டு பணம் பறித்து செல்கின்றனர். போலீசார் ரோந்து வருவது கிடையாது. 6 மணிக்கு மேல் வெளியே செல்ல அச்சமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News