செய்திகள்
Hogenakkal

ஒகேனக்கல்லில் குளிக்க தடை நீடிப்பால் சுற்றுலா பயணிகள் அவதி

Published On 2019-08-30 07:47 GMT   |   Update On 2019-08-30 07:47 GMT
ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கின்போது மெயினருவி மற்றும் சினிபால்ஸ் பகுதிகளில் சேதமடைந்து உள்ளதால் இன்று 23-வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை நீடித்து வருகிறது.

ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்தது. ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 10 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 9800 கனஅடியாக குறைந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் இன்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து 15 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.

கர்நாடக மாநிலத்திலும், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஒகேனக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன்காரணமாக ஒகேனக்கல்லில் கடந்த 8-ந் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டு உத்தரவிட்டது. ஒகேனக்கல்லில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைவானதால் கடந்த 25-ந் தேதி கோத்திக்கல்பாறையில் இருந்து ஊட்டமலை வரை மாற்று பாதையில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தபோது பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

ஆனால் வெள்ளப்பெருக்கின்போது மெயினருவி மற்றும் சினிபால்ஸ் ஆகிய பகுதிகளில் சேதமடைந்து உள்ளதால் இன்று 23-வது நாளாக தொடர்ந்து குளிக்க தடை நீடித்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதுகுறித்து அதிகாரியிடம் கேட்டபோது, சேதமடைந்த பகுதிகள் சீரமைத்த பிறகு மெயினருவி, சினிபால்ஸ் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க விரைவில் அனுமதிப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.

விரைவில் சேதமடைந்த மெயினருவி, மெயினருவி அருகே பெண்கள் குளிக்கும் இடம், மெயினருவி செல்லும் நடைபாதை, தொங்கும் பாலம், சினி பால்ஸ் செல்லும் வழி ஆகிய இடங்களை சீரமைத்து குளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags:    

Similar News