search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளிக்க தடை"

    • தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வருகிறார்கள். கன்னிப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடி செய்யபட்டு வருகிறது. பாசனத்திற்காக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் அணை பிப்ரவரி இறுதியில் மூடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் பிப்ரவரி மாத இறுதியில் அணை மூடப்பட்டது. ஆனால் விவசாயிகள் நெற்பயிர்கள் அறுவடை ஆகவில்லை. கூடுதலாக இரண்டு வாரங்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கலெக்டரை சந்தித்தும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஒரு வாரம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    தற்பொழுது பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் கலப்பதை தடுக்க பேச்சிப்பாறையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று மாலை பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து கோதையாற்றில் கரை புரண்டு ஓடியது. கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் கொட்டியது. திற்பரப்பு அருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்துள்ளது.இதை யடுத்து அந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட் சந்திப்பு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலத்தையும் தண்ணீர் இழுத்துச்சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 42.35 அடியாக உள்ளது. அணைக்கு 323 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 619 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்கள் மற்றும் கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 47.80 அடியாக உள்ளது. அணைக்கு 20 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 21 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 9.28 அடியாகவும், சிற்றார் 2-அணையின் நீர்மட்டம் 9.38 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.50 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 22.31 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் அணை நீர்மட்டம் கணிசமான அளவு சரிந்துள்ளதால் கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.20 அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் சரிந்து வருவதையடுத்து நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள்.
    • மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    சென்னை:

    புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

    இதன்படி புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

    சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் முழுவதிலும் போலீசார் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்ட தினமான வருகிற 31-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று கடற்கரை பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

    இதன்படி கடற்கரை பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், தடுப்பு வேலிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மெரினா கடற்கரையில் 31-ந்தேதி அன்று இரவு லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்பார்கள். குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் மெரினாவில் கூடுவார்கள் என்பதால் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

    பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தற்காலிக புறக்காவல் நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

    இந்த புறக்காவல் நிலையங்களில் பெண் போலீசார் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    சிறுவர், சிறுமிகள் கூட்டத்தில் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக கைகளில் 'அடையாள வளையம்' கட்டிவிடப்படுகிறது. இதில் பெற்றோர்களின் செல்போன் எண் மற்றும் போலீஸ் உதவியை நாடும் செல்போன் எண்கள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    இதன் மூலம் மாயமாகும் சிறுமிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையை சென்னை மாநகர போலீசார் கடந்த சில ஆண்டுகளாகவே பின்பற்றி வருகிறார்கள். இதனால் மெரினாவில் காணாமல் போகும் குழந்தைகள் உடனுக்குடன் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடுவார்கள்.

    இப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உள்ள போலீசார் சென்னை மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் ஈடுபடுகிறார்கள்.

    கிழக்கு கடற்கரை சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார் மோட்டார் சைக்கிள் பந்தயத்தை தடுக்கவும் நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    இதற்காக 20 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மணலிலும், கடலிலும் செல்லும் வகையிலான வாகனங்களில் ரோந்து சென்று கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

    மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்று விபத்துக்களை ஏற்படுத்துபவர்களை பிடிக்க சென்னை மாநகர் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தி போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது. மெரினா உள்ளிட்ட கடல் பகுதிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்காணிக்கும் வகையில் டிரோன் பாதுகாப்பிலும் போலீசார் ஈடுபட உள்ளனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் மற்றும் பெண்களிடம் சில்மிஷம் போன்ற செயல்களில் ஈடுபடுவோரையும் டிரோன் மூலமாக போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்களை தடுப்பதற்கு அடையாறு பகுதியில் இருந்து மாமல்லபுரம் வரை சுமார் 50 இடங்களில் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இதற்கு முன்பு புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்துகள் நடைபெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு 500-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடுப்புகள் அமைத்து விபத்துகளை கட்டுப்படுத்தவும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

    • கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
    • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த நாட்களாக பரவலாக இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி வருகிறது.

    இதே போல் போல் நேற்று இரவும் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடிவேரி பகுதியில் 7 செ.மீட்டர் மழை கொட்டியது.

    இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இருகரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது. மேலும் கொடிவேரி தடுப்பணையிலும் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.

    கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும் உபரி நீர் அதிகளவில் செல்வதாலும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் மீண்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதே போல் தொடர் மழை காரணமாக பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று கொடிவேரிக்கு பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவிக்கரையில் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் நேற்று வரை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். அங்கு பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்ததை தொடர்ந்து இன்று காலை முதல் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இந்த தகவலை களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் செண்பகப் பிரியா தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளதால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் அருவியை பார்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    • அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன.
    • இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு குளிக்க வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் பக்தர்க ளும் இங்கு வருகின்றனர். அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    தற்போது மழைஇன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.40 அடியாக உள்ளது. 290 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.61 அடியாக உள்ளது. மூலவைகையாறு வறண்டு காணப்படுவதால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.9, தேக்கடி 0.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழக-கேரள எல்லையில் இந்த அருவி அமைந்திருப்பதால் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அருவியில் நீராடி செல்வது வழக்கம்.

    இது தவிர ஆண்டு முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருவார்கள். தற்போது அருவியில் தண்ணீர் அதிக அளவு ஆர்ப்பரித்து கொட்டி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கிழக்கு வனச்சரகர் பிச்சை மணி தெரிவிக்கையில், அருவியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் மறு உத்தரவு வரும் வரை சுருளி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார். நாளை ஆடி 18-ம் பெருக்கு என்பதால் அருவியில் ஏராளமானோர் நீராட வருகை தருவார்கள். இந்நிலையில் வனத்துறையினரின் இந்த அறிவிப்பு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.
    • ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில், குமாரபாளையம், பள்ளிபா ளையம், ஜேடர்பாளையம், பரமத்திவேலுார், மோகனுார் வழியாக காவிரி ஆறு பாய்ந்து சென்றாலும், இடையில் சுற்றுலாத்தலம் இல்லாமல் இருப்பது, ஒரு குறையாகவே இருந்து வந்தது.

    கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுப்பணித் துறை பூங்கா அமைக்கப்பட் டது. மேலும், செயற்கை நீரூற்று, குழந்தைகள் விளை யாடக்கூடிய சீசா போன்ற வையும் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாட்களில், ஏராளமான சுற்றுலா பயணிகள், இங்கு வந்து, பூங்காவில் பொழுதை குதூ கலமாக கழித்து ஜேடர்பா ளையம் அணைக் கட்டு பகுதியில் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

    இந்நிலையில் தற்போது ஜேடர்பாளையம் அணைக் கட்டு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள ராஜா வாய்க்காலில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. வாய்க்கால் மற்றும் அணைக்கட்டு பகுதியில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி இறக்கின்றனர். கடந்த மாதம் மட்டும் 4 பேர் உயிரிழந்த உள்ளனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அங்கு குடிபோ தையில் இளை ஞர்கள் குளிக்க வருவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி, தற்காலிகமாக ஜேடர்பாளை யம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்துள்ளனர். ஜேடர்பா ளையம் அணைக்கட்டு பூங்காவிற்கு மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி, குளிக்க அனுமதி கிடையாது என்று பொதுப்ப ணித்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.
    • சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளி அருவி மிக சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமின்றி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் புனித தலமாகவும் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் வரை வறண்டு கிடந்த சுருளி அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக நீராடி மகிழ்ந்தனர்.

    இந்நிலையில் அருவியை யொட்டியுள்ள வனப்பகுதியில் யானைகள் மற்றும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகிறது.

    இதனால் நேற்று பிற்பகல் முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் பல்வேறு ஊர்களில் இருந்து அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில், சுருளி அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.

    அமாவாசை நாட்களில் மேலும் அதிக அளவு பக்தர்கள் வருகை தந்து இங்குள்ள அருவியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேலப்பர், நாராயணன் கோவிலில் வழிபாடு செய்து செல்கின்றனர். யானைகள் நடமாட்டம் என்பது அருவியையொட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் விரட்டுவதில் வனத்துறையினர் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர்.

    சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். வருகிற 17ந் தேதி ஆடி அமாவாசை தினம் என்பதால் அன்று அதிக அளவு பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாக யானைகள், காட்டெருமைகளை விரட்டி பக்தர்கள் நீராட அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக திடீரென பரவலாக மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக அம்பை, ராதாபுரத்தில் தலா 15 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 10 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் அணை பகுதியில் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. சேர்வலாறில் 6 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாநகர பகுதியில் பெய்த பரவலான மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. பெரும்பாலான சாலைகள் சேறும் சகதியுமாக காட்சியளித்தது.

    இந்நிலையில் இன்று காலை முதல் வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சீரானது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இன்றும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிக்க போலீசார் தடை விதித்தனர். நேற்று மாலையில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக கொட்ட தொடங்கியது.

    இதனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர்.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக கடனா அணை பகுதியில் 20 மில்லிமீட்டரும், ராமநதியில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. சங்கரன்கோவில், சிவகிரி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    • பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறு ஏரி குளம் ஆகிய இடங்களில்நீர் நிரம்பி உள்ளது. பண்ருட்டி கெடிலம் ஆறு,கண்டரக் கோட்டை தென்பெண்ணை ஆறுஆகிய இடங்களில்நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் ஆறு, குளம்,ஏரிகளில் குளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்று பகுதியில் குளிப்பதற்காக வந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பயிற்சிசப்.இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார்தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

    • இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
    • கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் கீழே விழும் தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குளித்து விட்டு மகிழ்ச்சியாக செல்வது வழக்கம்.

    இந்நிலையில் சத்தியமங்கலம், கோபி செட்டிபாளையம், நம்பியூர், அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இரவு பெய்த கனமழையால் மழை வெள்ளம் கசிவுநீர் ஓடைகளில் கலந்து பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

    இதனால் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்ப ட்டுள்ள கொடிவேரி அணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் பொதுபணித்து றையினர் தடை விதித்துள்ளனர்.

    மேலும் பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ளம் வினாடிக்கு 4200 கன அடி மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பாலத்தில் நின்று செல்பி எடுக்கவும், ஆற்றில் இறங்கவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    • குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.
    • சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் ஐந்தருவி,மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் மெயினருவியில் தொடர்ந்து தண்ணீர் அதிகளவில் விழுந்ததால் அங்கு மட்டும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை நீடித்து வருகிறது.

    ×