செய்திகள்
பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பு.

சென்னையில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை

Published On 2019-08-27 05:17 GMT   |   Update On 2019-08-27 08:05 GMT
சென்னை பல்லாவரத்தில் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை:

சென்னை பல்லாவரத்தில் இன்று அதிகாலை நடந்த பரபரப்பான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தாம்பரம் அருகே பல்லாவரத்தில் ராணுவ வீரர்கள் முகாம் மற்றும் குடியிருப்பு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள்.

இந்த முகாமில் ஹவில்தார் அந்தஸ்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் பிரவின்குமார் ஜோஷி. இவர் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு கீழ் ரைபிள் மேனாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரா பணியாற்றினார். இருவருக்கும் இடையே அடிக்கடி பணியின்போது தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஜெகதீஸ்வரா பணிக்கு தாமதமாக வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அது கடுமையான வாக்குவாதமாக மாறி மோதலாக வெடித்தது.

அதிகாரி பிரவீன்குமார் ஜோஷி, ராணுவ வீரர் ஜெகதீஸ்வரா தாமதமாக வந்ததற்காக தண்டனை கொடுத்துள்ளார். பின்பக்கமாக பல்டி அடிக்க சொன்னதாக தெரிகிறது. இதன் பின்னர் பிரவீன்குமார் ஜோஷி தனது அறைக்கு சென்று படுத்து தூங்கினார். ஆனால் ரைபிள் மேன் ஜெகதீஸ்வரா, ஆத்திரம் தீராத நிலையில் கடும் கோபத்துடன் காணப்பட்டார்.



பிரவீன்குமார் ஜோஷி படுத்து தூங்கிக் கொண்டிருந்த அறையை நோக்கி ஜெகதீஸ்வரா வேகமாக சென்றார். தான் வைத்திருந்த எந்திர துப்பாக்கியால் தனது மேல் அதிகாரியான பிரவின்குமார்ஜோஷியை சரமாரியாக சுட்டார். அவரது உடலை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் தூக்கத்திலேயே பிரவீன்குமார் உயிரிழந்தார்.

துப்பாக்கிசூடு சத்தம் ராணுவ முகாம் முழுவதும் பயங்கரமாக எதிரொலித்தது. மற்ற அதிகாரிகள் மற்றும் வீரர்களும் ஓடி வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதீஸ்வரா அடுத்த நோடியே பயத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து 2 உயிர்களும் பறிபோனது.

இதனைப் பார்த்து சக அதிகாரிகளும், வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் பல்லாவரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உயர் போலீஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

பிரவின்குமார்ஜோஷி மற்றும் ஜெகதீஸ்வரா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராணுவ அதிகாரியான பிரவின்குமார்ஜோஷி தனக்கு கீழ் பணியாற்றி வந்த ராணுவ வீரர் ஜெகதீஸ்வராவை பணியின்போது இதுபோன்று பலமுறை துன்புறுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாகவே மன உளச்சலில் ஜெகதீஸ்வரா துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதன்பின்னணி குறித்து சென்னை மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், ராணுவ முகாமில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராணுவ முகாமில் நடைபெற்றுள்ள இந்த கொலை மற்றும் தற்கொலை சம்பவம் அங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News