செய்திகள்
இன்று நடைபெற்ற கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சி.

தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2019-08-26 07:59 GMT   |   Update On 2019-08-26 07:59 GMT
கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் கல்வி தொலைக்காட்சி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.
சென்னை:

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் டி.வி. தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான அலுவலகம், படப்பிடிப்பு தளம் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 10-வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்தது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது.

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்கு சபாநாயகர் தனபால் தலைமை தாங்கினார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், பாடநூல் வாரிய தலைவர் வளர்மதி, தலைமை செயலாளர் சண்முகம், கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் உள்பட கல்வி துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்று தொடங்கப்பட்டு உள்ள கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், நுழைவுத் தேர்வு குறித்த விளக்கங்கள் புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகள், பாட வல்லுனர்கள் நடத்தும் சிறப்பு வகுப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள், சுய தொழில் தொடர்பான நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள், தலை சிறந்த வல்லுனர்களின் உரையும் ஒளிபரப்பப்பட உள்ளது. கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் சேனல் எண் 200ல் பார்க்கலாம்.

கல்வி தொலைக்காட்சியை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 57 ஆயிரம் பள்ளிகளில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேபிள் டி.வி., ‘யூ-டியூப்’பிலும் பார்க்கலாம்.

இந்த ஒளிபரப்பில் 50 சதவீதம் பாடத்திட்டம் சார்ந்தது. 10 சதவீதம் நீட், போட்டித் தேர்வுக்கான வழி காட்டுதல் இடம் பெறும். 40 சதவீதம் நன்னடத்தை, தனி மனித ஒழுக்கம் சார்ந்த நிகழ்ச்சியாக இருக்கும்.

கல்வி டி.வி.யில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் முன்கூட்டியே ரெக்கார்டு செய்து வைத்து வழங்க உள்ளனர். 33 தலைப்புகளில் ஒளிபரப்புவதற்காக நிகழ்ச்சிகள் கைவசம் வைத்துள்ளனர்.

பள்ளிக்கூடங்களில் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை கல்வி தொலைக்காட்சியை பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டி.வி. இல்லாத பள்ளிகளில் எல்.சி.டி. புரஜக்டர் வழியாக ‘யூ-டியூப்’ பயன்படுத்தி ஒளிபரப்பு செய்கின்றனர்.

50க்கும் மேற்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் குழுவாக இணைந்து கல்வி டிவிக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றனர்.
Tags:    

Similar News