செய்திகள்
பழனி சண்முகநதி அருகே உடுமலை சாலையில் சாய்ந்து விழுந்த மரம்.

பழனி பகுதியில் சூறைக்காற்றுடன் மழை - கோவில் சுவர் இடிந்ததில் 10 பேர் படுகாயம்

Published On 2019-08-08 10:13 GMT   |   Update On 2019-08-08 10:13 GMT
பழனி பகுதியில் திடீரென வீசிய சூறைக்காற்றுக்கு கோவில் சுவர் இடிந்ததில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். சண்முகநதி அருகே மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பழனி:

பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 3 மணிக்கு பிறகு பழனி பகுதிகளில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் சூறைக்காற்றுக்கு கஞ்சநாயக்கன்பட்டி கரை கருப்பணசாமி கோவில் சுவர் இடிந்து விழுந்தது.

அப்போது அங்கு கொங்கப்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 32), தனது மகள் பிரபாஸ்ரீக்கு (8) காதுகுத்தும் நிகழ்ச்சியை வைத்திருந்தார். இதனால் சுவர் இடிந்ததில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அவரின் உறவினர்களான பாலசமுத்திரத்தை சேர்ந்த கனகவல்லி (40), தங்காத்தாள் (42) உள்பட 10 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பழனி சண்முகநதி அருகே உடுமலை சாலையில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.




Tags:    

Similar News