செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

பாவூர்சத்திரத்தில் 2 வீடுகளில் கொள்ளை

Published On 2019-08-07 10:36 GMT   |   Update On 2019-08-07 10:36 GMT
ஒரே நாளில் 2 வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பாவூர்சத்திரம் பகுதியில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் காமராஜ் நகர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40). இவர் ஆலங்குளத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி மகேசுவரி. இவர் கீழப்பாவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.

மாலையில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மகேசுவரி, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றுவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இதேபோல் மற்றொருவரின் வீட்டிலும் மர்மநபர்கள் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பாவூர்சத்திரம் கே.டி.சி நகரில் வாட்டர் டேங்க் சாலையில் வசித்து வருபவர் கார்த்திகேயன் (44). இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 7½ பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரமும் கொள்ளை போய் இருந்தது. தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

இந்த சம்பவங்கள் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.ஒரே நாளில் ஆள் இல்லாத வீடுகளில் புகுந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது பாவூர்சத்திரம் பகுதியில் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News