செய்திகள்
சந்தையில் ஆடுகளை வாங்க குவிந்த வியாபாரிகள்.

பக்ரீத் பண்டிகையையொட்டி அய்யலூர் ஆட்டுச்சந்தையில் ரூ.1 கோடிக்கு விற்பனை

Published On 2019-08-01 09:19 GMT   |   Update On 2019-08-01 09:19 GMT
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
வடமதுரை:

அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டுச்சந்தை இன்று வழக்கத்தை விட விறுவிறுப்பாக நடந்தது. ஆடி 18 மற்றும் பக்ரீத் பண்டிகை வருவதால் இதற்காக ஆடுகள் வாங்க பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

விற்பனைக்காகவும் ஆடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டது. அதிக அளவில் செம்மறி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.3 ஆயிரத்து 800 முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது. நேரம் செல்ல செல்ல ரூ.4 ஆயிரத்து 500 வர விலை கூடியது.

இருந்த போதும் அதனை வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். இதே போல 1 கிலோ எடை கொண்ட கோழி ரூ.250 முதல் ரூ.280 வரை விற்கப்பட்டது. காலை 4 மணிக்கு தொடங்கிய சந்தை 10 மணி வரை களைகட்டியது. இன்று மட்டும் ரூ.1 கோடி அளவில் விற்பனை நடைபெற்றதால் சந்தைக்கு வந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

சந்தை நடைபெறும் பகுதிக்கு முன்பாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவு இருந்தது. இதனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். ஆனால் இந்த கடைகள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டு இருந்தன. இதனால் எவ்வித இடையூறும் இன்றி சந்தையில் விற்பனை நடைபெற்றது.

இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்படாத அளவு வாகனங்கள் எளிதாக சாலையை கடந்து சென்றன. இதே போல ஒவ்வொரு வாரமும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.




Tags:    

Similar News