செய்திகள்
மணல் கடத்தல்

தாராபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரை வேன் ஏற்றி கொல்ல முயற்சி

Published On 2019-08-01 05:49 GMT   |   Update On 2019-08-01 05:49 GMT
தாராபுரத்தில் மணல் திருட்டை தடுக்க முயன்ற வருவாய் ஆய்வாளரை கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் கார்த்திக் குமார் (34). இவர் தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடியில் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு தாராபுரம் தாசில்தார் ரவிச்சந்திரனிடம் இருந்து கார்த்திக் குமாருக்கு போன் வந்தது. அப்போது தாசில்தார் அமராவதி ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் வந்துள்ளது. அங்கு சென்று பாருங்கள் என கூறி உள்ளார். அதன் படி கார்த்திக்குமார் மட்டும் தனியாக அமராவதி ஆற்றுக்கு சென்றார்.

அப்போது அங்கு ஒருவர் மணலை சாக்கு மூட்டையில் கட்டி ஆம்னி வேனில் ஏற்றி கொண்டு இருந்தார். இதனை கார்த்திக் குமார் தடுத்தார். அப்போது அவர் வேனை எடுத்தார். அதனை தடுக்க வருவாய் ஆய்வாளர் வேன் முன் நின்றார்.

ஆனாலும் நிறுத்தாமல் வேன் டிரைவர் வண்டியை எடுத்ததால் கார்த்திக் குமார் மீது மோதியது. இதில் அவரது இடது கை தோல் பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன் பின்னர் வேன் டிரைவர் வண்டியை ஓட்டி சென்று விட்டார்.

காயம் அடைந்த வருவாய் ஆய்வாளர் கார்த்திக் குமார் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வருவாய் ஆய்வாளர் மீது ஆம்னி வேனை ஏற்றியவர் கன்னிவாடியை சேர்ந்த தனபால் என்பது தெரிய வந்தது.

அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளரை ஆம்னி வேனை ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News