செய்திகள்
கே.எஸ்.அழகிரி

சேலம் உருக்கு ஆலை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரதம் - கே.எஸ்.அழகிரி

Published On 2019-07-27 20:21 GMT   |   Update On 2019-07-27 20:21 GMT
இந்திய தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்கு ஆலையை தனியார் மயமாவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்கு ஆலையை தனியார் வசம் தாரை வார்க்க மத்திய பா.ஜனதா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்திய தொழில் நிறுவனங்களில் பெருமைக்குரிய சேலம் உருக்கு ஆலையை தனியார் வசம் தாரை வார்க்க மத்திய பா.ஜனதா அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு முன்னோடியாக அதன் பங்குகளை விலைக்கு வாங்க தனியார் நிறுவனங்களிடம் இருந்து மத்திய அரசு விருப்பக் கடிதங்களை இன்னும் 2 வாரங்களில் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மக்களிடையேயும், தொழிலாளர்களிடையேயும் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நஷ்ட கணக்கு கூறும் நிர்வாகம், மூலதனத்திற்காக பெறப்பட்ட கடனுக்கான வட்டி, இதுவரை சேலம் உருக்கு ஆலை நிறுவனம் செலுத்திய தொகை, இன்னும் எவ்வளவு செலுத்தப்பட வேண்டும் என்ற விவரங்களை தொழிலாளர்கள் பலமுறை கோரியும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விவரங்களுக்கு பதில் தர நிர்வாகம் மறுத்து வருகிறது.

லாபத்துடன் இயங்குவதற்கு நிறைய வாய்ப்புள்ள இந்த ஆலையை தனியார் மயமாக்குவதை எதிர்த்து சேலம் மாநகரில் வருகிற 29–ந் திங்கட்கிழமை(நாளை) காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தை தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் நான் தொடங்கி வைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News