செய்திகள்
கோபாலகிருஷ்ணன், செல்வி மற்றும் துரைராஜ்

பல்லடத்தில் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Published On 2019-07-16 04:57 GMT   |   Update On 2019-07-16 04:57 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்து விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் (70). இவரது மனைவி ராசாத்தி. இவர்களுக்கு செல்வி (42), சாந்தி என 2 மகளும், கோபால கிருஷ்ணன் (37) என்ற மகனும் இருந்தனர் இவருக்கு திருமணம் ஆகவில்லை. துரை ராஜ் மனைவி ராசாத்தி கடந்த 20 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

மகள் செல்விக்கு சிவக்குமார் என்பவருடன் திருமணம் நடந்து ரகுநாதன் (22) என்ற மகன் இருந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தனது மகனுடன் தந்தை வீட்டிலே தங்கி விட்டார்.

கடந்த ஆண்டு செல்வியின் மகன் ரகுநாதன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் 37 வயது ஆகியும் கோபால கிருஷ்ணனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலையும் அவர்களை வாட்டியது. இதனால் குடும்பமே மனமுடைந்து காணப்பட்டது. இதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன் படி கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை துரைராஜ், செல்வி ஆகியோர் வி‌ஷம் குடித்தனர். இதில் துரைராஜ் உயிர் இழந்தார். செல்வி மயங்கி கிடந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை செல்வியும் பரிதாபமாக இறந்தார்.

நேற்று காலை இடுவாயில் உள்ள தனது தங்கை சாந்தியை பார்க்க கோபால கிருஷ்ணன் சென்றுள்ளார். அப்போது அவரிடம் தனது சொத்து பத்திரத்தை கொடுத்துள்ளார்.

மேலும் ரூ. 30 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார். இது குறித்து சாந்தி கேட்ட போது இந்த பணம் கண்டிப்பாக உனக்கு தேவைப்படும் என கூறி உள்ளார்.

சொத்து பத்திரம் குறித்து கேட்ட போது எங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லை. அதனால் நீ வைத்து கொள் என கூறியுள்ளார்.


பின்னர் வீட்டிற்கு வந்த கோபால கிருஷ்ணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தனது இறுதி சடங்கிற்காக தான் பணத்தை கொடுத்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News