செய்திகள்
வைகோ

தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை- சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

Published On 2019-07-05 05:30 GMT   |   Update On 2019-07-05 05:30 GMT
தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
சென்னை:

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி வைகோ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அபராத தொகையை வைகோ உடனடியாக செலுத்தினார். இதையடுத்து வைகோ மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடக்க உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக தரப்பில் மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு வழக்கின் தண்டிக்கப்பட்டவர் தண்டனைக் காலம் முடிந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, இவ்வழக்கில் வைகோவுக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News