செய்திகள்
கஞ்சா

புதுவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 4 பேர் கைது

Published On 2019-07-03 11:38 GMT   |   Update On 2019-07-03 11:38 GMT
புதுவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 495 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி நேற்று மாலை இந்திராகாந்தி சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப் போது அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் பலர் வந்து கொண்டு இருந்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டுக்குள் சென்று பார்த்த போது அங்கு 4 பேர் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.

உடனடியாக அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்தில் வைத்து இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சின்ன கொசப்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார் (வயது 19), அரியாங்குப்பத்தை சேர்ந்த லோகநாதன் (19), விக்னேஷ் (22), பாலாஜி (24) என்பது தெரிய வந்தது.

ரவுடிகளான இவர்கள் மீது அடிதடி, குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் 4 பேரும் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் ஒரு பெண்ணிடம் இருந்து கஞ்சா வாங்கி போன் மூலம் மாணவர்களை வரவழைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்த 495 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.20 ஆயிரமாகும்.

மேலும் 2 மோட்டார் சைக்கிள்கள், 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News