செய்திகள்
மோட்டர் சைக்கிள் தீ

ராஜபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

Published On 2019-06-28 11:13 GMT   |   Update On 2019-06-28 11:13 GMT
ராஜபாளையத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாயைம் ரெயில்வே பீடர் ரோட்டில் தித்திப்பூ என்பவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜயகுமார்(வயது 29). ராஜபாளையத்தை சேர்ந்த இன்பமணி(26), சரவணன்(32), வீர பாண்டி(28) ஆகிய 4 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவு இவர்கள், தங்களது மோட்டார் சைக்கிள்களை கேட் முன்பு நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கினர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் டிராவல்ஸ் நிறுவனம் முன்பு நிறுத்தியிருந்த 3 மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது.

இதற்கிடையில் கடைக்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் புகை வருவதை அறிந்து விழித்துக்கொண்டனர். கேட் முன்பு மோட்டார் சைக்கிள்கள் எரிந்து கொண்டிருந்ததால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

இது குறித்து தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராமன் தலைமையிலான வீரரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராடி தீயை அணைத்தனர். அப்போது கடைக்குள் இருந்து சத்தம் வந்தது.

உடனே கதவை உடைத்து உள்ளே பார்த்த போது புகை மூட்டத்தால் விஜயகுமார், இன்பமணி, சரவணன், வீரபாண்டி ஆகியோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி இருந்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 4 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்தது தொடர்பாக வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமூக விரோதிகள் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து விட்டு செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தங்கள் வாகனங்களை வெளியே நிறுத்தவே அச்சப்படுகின்றனர்.

எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைக்கும், ‘சைக்கோ’ கும்பலை பிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News