செய்திகள்
மின்தடை

தொண்டியில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-06-28 10:58 GMT   |   Update On 2019-06-28 10:58 GMT
தொண்டியில் மின்வெட்டால் அவதி அடைந்த பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தொண்டி:

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக வெயில் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மின் வெட்டு ஏற்படுவதை கண்டித்து பொதுமக்கள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதற்கு அனுமதி பெற போலீஸ் நிலையத்தை அணுகியபோது அனுமதி மறுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பொதுமக்கள் தொண்டி மின்வாரிய அலுவலகத்தில் திரண்டனர். உள்ளே யாரையும் போலீசார் அனுமதிக்காததால் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த பொதுமக்கள் சார்பில் மண்டலம் ஜெய்னுலாப்தீன் சென்றார். அங்கு உதவி மின் பொறியாளரிடம் கோரிக்கையை தெரிவித்தனர். இருந்தும் உதவி செயற்பொறியாளரிடம் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதனைத்தொடர்ந்து திருவாடானையில் இருந்து வந்த உதவி செயற் பொறியாளரிடம் தொண்டி பகுதியில் அறிவிப்பு இன்றி அடிக்கடி மின் வெட்டு செய்யப்படுகிறது. இதனால் பச்சிளம் குழந்தைகள் முதல் மாணவ,மாணவிகள், வயதானோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தொண்டியில் பல இடங்களில் மின் கம்பங்கள் பழுதாகி எப்போது விழும் என தெரியாத நிலையில் உள்ளன.

பல இடங்களில் கைக்கு எட்டும் தொலைவில் தாழ்வாக மின்சாரம் பாயும் மின் கம்பிகள் உள்ளதை சரி செய்ய, புதிதாக மின் மாற்றிகளை பொருத்த, பராமரிக்க உள்ளிட்ட மின் வாரியம் சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தனர்.

உதவி செயற்பொறியாளர் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியதை தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News