செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தொழிலாளர்கள்

Published On 2019-06-26 17:16 GMT   |   Update On 2019-06-26 17:16 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
வேடசந்தூர்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் சிக்கனன் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் பிச்சைமுத்து, ஒன்றிய துணை செயலாளர் சவடமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் எம்.ஆர்.முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் 200-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 200 நாட்கள் வேலை வேண்டும். தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்களை தட்டுபாடின்றி வினியோகம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி பகுதியிலும் விரிவுப்படுத்த வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News