செய்திகள்

சென்னையில் ஒரே நாளில் 11 இடத்தில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை

Published On 2019-06-25 05:25 GMT   |   Update On 2019-06-25 05:25 GMT
சென்னையில் ஒரே நாளில் தனியாக நடந்து சென்ற 11 பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

சென்னை மாநகரில் செயின் பறிப்பு சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன.

சென்னையில் தண்ணீர் பிரச்சினையோடு போராடும் பெண்களுக்கு செயின் பறிப்பு கொள்ளையர்களால் புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு சென்னையில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் நேற்று ஒரே நாளில் தங்களது அட்டூழியத்தை அரங்கேற்றியுள்ளனர்.

தனியாக நடந்து சென்ற 11 பெண்களை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அது கட்டுக்குள் வராமலேயே உள்ளது. இதனால் சென்னை பெண்களை செயின் பறிப்பு கொள்ளையர்கள் விடாது கருப்பாகவே துரத்திக் கொண்டுள்ளனர்.



சென்னையில் நேற்று ஒரே நாளில் 11 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கோட்டூர்புரம் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த செல்வி என்ற பெண்ணிடம் செயின் பறித்த கொள்ளையர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோ வெளியான நிலையில் சென்னை போலீசாரும் செயின் பறிப்பு கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளனர்.

தேனாம்பேட்டையில் கற்பகமணி, ராயப்பேட்டையில் ஜெயலட்சுமி, திருவல்லிக்கேணியில் சுதா தேவி, மயிலாப்பூரில் சாந்தா, பள்ளிக்கரணையில் பாலாம்மாள், எழும்பூரில் மேரி, கொடுங்கையூரில் ரமணி, ஆதம்பாக்கத்தில் முத்துலட்சுமி என செயின் பறிப்பு கொள்ளையர்களிடம் சிக்கிய பெண்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் செயின் பறிப்பு சம்பவங்கள் இப்போது மட்டும் நடைபெறவில்லை. எப்போதுமே செயின் பறிப்பு கொள்ளையர்களால் சென்னை பெண்களின் உயிருக்கும், அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மெரினா கடற்கரை பகுதியில் செயின் பறிப்பு கொள்ளையர்களை விரட்டி சென்ற பெண் மின்கம்பத்தில் மோதி பலியானார். சில மாதங்களுக்கு முன்பு செயின் பறிப்பு கொள்ளையர்கள் பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் தரதரவென்று இழுத்து சென்ற சம்பவமும் நடைபெற்றது. செயின் பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்கள் பெண்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் மிகவும் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள். எனவே அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டப்பகலில் மிகவும் துணிச்சலுடன் செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களே ஆவார்கள். சிறுவர்களும் பல இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள்.

இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மது, கஞ்சா போதையிலேயே இந்த செயல்களில் ஈடுபடுவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் வேதனை தெரிவித்தார். அதே நேரத்தில் புதிது புதிதாக செயின் பறிப்பு குற்றவாளிகள் உருவாகிக்கொண்டு இருப்பதாகவும், அதன் காரணமாகவே செயின் பறிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

படித்து விட்டு வேலை இன்றி ஊர் சுற்றும் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் தங்களது அன்றாட செலவுகளுக்காகவே செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். இது போன்று திருடப்படும் செயின்களை அடகு கடையில் அடமானமாக வைத்து எளிதாக அவர்களால் பணம் வாங்க முடிவதும், செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.

எனவே திருட்டு நகைகளை வாங்கும் அடகு கடைக்காரர்கள் மீதும் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் செயின் பறிப்பு ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. எனவே சென்னை போலீசார் செயின் பறிப்பை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Tags:    

Similar News