செய்திகள்

பிரதமர், முதலமைச்சரால் மழை பெய்ய வைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2019-06-21 05:09 GMT   |   Update On 2019-06-21 05:09 GMT
மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பெய்ய வைக்க முடியாது என்றும் அது பருவ காலங்களில் தான் பெய்யும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை களப்பணியாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆலோசனை நடத்தினார்.

கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் பஞ்சாயத்து தலைவர்கள் இல்லை. பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து செயலாளர்களும் பொறுப்பாக செயல்படவில்லை.

இவர்கள் மக்களிடம் ஓட்டு கேட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே பணியில் மெத்தனமாக உள்ளனர்.

தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரிசெய்ய அரசிடம் திட்டங்கள் உள்ளன. ஆனால் அதை நடைமுறைப்படுத்த வேண்டிய ஊராட்சி செயலாளர்கள் மெத்தனமாக உள்ளதே தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.

ஒருசில ஊராட்சி செயலாளர்கள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த அரசுக்கும் அவப்பெயர் வந்துவிடும்.

தண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் என்பது தவறு. மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறித் தான் தனியார் பள்ளிகள் அனுமதி பெற்றுள்ளன. தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி பள்ளிகளை மூடப்போவதாக அரசை மிரட்டக்கூடாது.



மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பெய்ய வைக்க முடியாது. அது பருவ காலங்களில் தான் பெய்யும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தள்ளி போயிருக்கிறது. வருகிற 30-ந் தேதிக்கு பின்னர் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முதல்-அமைச்சர் பல் வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் பற்றி முதல்வர் முடிவு செய்வார்.

டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் அல்லது கட்சி தலைவர் பங்கேற்க வேண்டும் என அழைப்பு வந்தது. அதன் காரணமாக தான் அமைச்சர் சி.வி.சண்முகம் அந்த கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் ரூ.8 கோடி செலவில் குடிநீர் வினியோகப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News