செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 8 போலீசார் அனுமதி

Published On 2019-06-20 10:20 GMT   |   Update On 2019-06-20 10:20 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைரஸ் காய்ச்சலுக்கு 8 போலீசார் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை:

கோவைபுதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 4-ம் அணி பயிற்சி மையம் உள்ளது. இங்கு போலீசாருக்கு பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்குவதற்கு பயிற்சி மைய வளாகத்திலேயே குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி மையத்தில் உள்ள போலீசார் முக்கிய சம்பவங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த பயிற்சி மையத்தில் பணியாற்றும் சில போலீசார் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர். ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து நேற்று கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அவர்களில் நந்தகுமார்(24), செல்வசுந்தரம்(28), கருப்பசாமி(23), செல்வகுமார்(26), அலெக்ஸ்(24), மணிகண்டன்(27), தீனதயாள்(27), அறிவழகன்(28) ஆகிய 8 பேருக்கு காய்ச்சல் அதிகளவில் இருந்ததால் அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். 8 போலீசாருக்கும் நடத்தப்பட்ட சோதனையில் வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தனி வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் வேறு யாருக்காவது இந்த காய்ச்சல் இருக்கிறதா என்றும் கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News