செய்திகள்

திருமணத்திற்கு முதல் நாள் மாயம்: புது மாப்பிள்ளையை தேடி போலீசார் சென்னை சென்றனர்

Published On 2019-06-17 12:20 GMT   |   Update On 2019-06-17 12:20 GMT
நாகர்கோவிலில் திருமணத்திற்கு முதல் நாள் புதுமாப்பிள்ளை மாயமானார். அவரை தேடி போலீசார் சென்னை சென்றுள்ளனர். செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து அதற்காக பெண் பார்த்து வந்தனர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முந்திய நாள் இரவு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு வெளியில் சென்று விட்டு வருவதாக கூறி சென்ற மணமகன், அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் அவரை தேடிய போதும் அவர் எங்கு சென்றார் என்பதை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து மணமகன் மாயமானது பற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது பற்றி வழக்குப்பதிவு செய்து அவரை தேட தொடங்கினார்கள்.

அவரது செல்போன் டவர் மூலம் விசாரணை நடத்தப்பட்டபோது, அவர் தற்போது சென்னையில் இருப்பது தெரியவந்தது. மாயமான மணமகனின் தந்தை முதலில் கோவில்பட்டி பகுதியில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.

அப்போது அவரது மகன் அங்குள்ள கல்லூரியில் என்ஜினீயரிங் முடித்துவிட்டு சென்னையில் உள்ள கம்பெனியில் என்ஜினீயராக சேர்ந்துவிட்டார். பணி ஓய்வுக்கு பிறகு அவரது தந்தை நாகர்கோவிலுக்கு வந்துவிட்டார். ஆனாலும் அவரது மகன் வேலை காரணமாக தொடர்ந்து சென்னையிலேயே தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார்.

இதனால் அவருக்கு நாகர்கோவிலை விட சென்னையில் தான் அதிக நண்பர்கள் உள்ளனர். எனவே நாகர்கோவிலில் இருந்து மாயமான அவர் சென்னையில் உள்ள யாராவது ஒரு நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். எனவே அவரை கண்டு பிடிப்பதற்காக போலீசாரும், அவரது உறவினர்களும் சென்னை சென்று உள்ளனர்.

அவரது செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர் இருக்கும் இடம் தெரிந்தபிறகு தான் திருமணத்திற்கு முதல் நாள் அவர் எதற்காக வீட்டை விட்டு வெளியேறினார் என்ற தகவல் தெரியவரும்.

Tags:    

Similar News