செய்திகள்

கோவை புதூரில் போலீசாருக்கு 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்- முதலமைச்சர் திறந்து வைத்தார்

Published On 2019-06-13 10:20 GMT   |   Update On 2019-06-13 10:20 GMT
கோவை புதூரில் போலீசாருக்கு புதியதாக கட்டப்பட்ட 137 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.
கோவை:

கோவை புதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் 4-ம் அணியில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசிக்கும் வகையில் ரூ.10.88 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய 137 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்பில் வரவேற்பு அறை, 2 படுக்கை அறைகள், சமையல் அறை மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய 2 கழிவறைகளும் கட்டப்பட்டுள்ளது.

இந்த அடுக்குமாடி குடியிருப்பை சென்னையில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார்.

கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்து விளக்கேற்றினார். இதில் கலெக்டர் ராஜாமணி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புதிய குடியிருப்பை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

சென்னையில் நேற்று நடந்த கூட்டம் தேர்தலுக்கு பின் நடத்த திட்டமிட்டு இருந்த கூட்டம்தான். கட்சியை எப்படி பலப்படுத்துவது, உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் சகோதரர்கள் போல் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். இதில் எந்த பிரச்சனையும் இல்லை. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என கோவை மாவட்டம் சூலூர் தொகுதி உள்பட 9 சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற மக்கள் வாக்கு அளித்தனர். உள்ளாட்சி தேர்தலில் இது தொடரும்.

எதிர்கட்சி ஏதாவது நடக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதுபோல் எதுவும் நடக்காது. இது மிகப்பெரிய பேரியக்கம். மத்தியில் தண்ணீர் மேலாண்மை குறித்த கூட்டத்துக்கு சென்ற போது மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், அமித்ஷாவை சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தோம். தமிழகத்தின் அனைத்து தேவையும் நிறைவேற்றுவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.

தமிழகத்தில் 5 ஆயிரம் கோடி நிதியில் தண்ணீர் விநியோகித்துக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இயற்கையான வறட்சி ஏற்பட்டுள்ளதால் அதை எப்படி சரிசெய்வது என திட்டமிட்டு வருகிறோம். கடுமையான வறட்சியிலும், கூடுதலாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றதை மக்கள் புரிந்துள்ளனர்.

எனவே அதன் முடிவு உள்ளாட்சி தேர்தலில் தெரியும். பா.ஜ.க. தமிழகத்துக்கு எந்த துரோகமும் செய்யவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்த போது தான் தமிழகத்துக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. சூலூர் எப்போதுமே அ.தி.மு.க. கோட்டை. அ.தி.மு.க. வாக்கு வங்கி குறையவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News