செய்திகள்

குமரி மாவட்டத்தில் இன்றும் கடல் சீற்றம்

Published On 2019-06-13 09:38 GMT   |   Update On 2019-06-13 09:38 GMT
குமரி மாவட்டத்தில் புயல் காரணமாக இன்று 5-வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. வள்ளவிளை பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அரபிக்கடலில் ‘வாயு’ புயல் உருவாகி உள்ளதால் மழை மேலும் தீவிரமாக பெய்து வருகிறது.

புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுகிறது. இன்று 5-வது நாளாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகள் கரையை நோக்கி ஆக்ரோசமாக சீறிப்பாய்ந்தன. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர்கள் சேதம் அடைந்தன. இதை தடுக்க மணல் மூட்டைகள் போடப்பட்டன. ஆனாலும் கடலின் சீற்றத்திற்கு முன்பு மணல் மூட்டைகள் தாக்கு பிடிக்க முடியவில்லை.

10 அடி முதல் 15 அடி வரை சீறிப்பாயும் அலைகள் மீனவர் கிராமங்களுக்குள்ளும் புகுந்தன. இதனால் வள்ளவிளை மீனவர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதனால் அங்கு உள்ளவர்கள் தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

மார்த்தாண்டம் துறை, நீரோடி, வள்ளவிளை பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. பூத்துறையிலும் 2 வீடுகள் இடிந்தன. மேலும் வள்ளவிளை-தூத்தூர் சாலையும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இந்த வழியாக போக்குவரத்து நடைபெறவில்லை.

இந்த பகுதி மீனவ மக்கள் கடல் சீற்றம் காரணமாக அச்சத்துடனேயே காணப்படுகிறார்கள்.

குளச்சல், இரையுமன் துறை, இரவிபுதூர்கடை, முள்ளூர்துறை, ராஜாக்க மங்கலம் துறை போன்ற பகுதிகளிலும் இன்று கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம், கீழமணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை உள்பட கடற்கரை கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மறு அறிவிப்பு வரும்வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News