செய்திகள்

வறட்சியால் வரத்து குறைவு - காய்கறி விலை கடும் உயர்வு

Published On 2019-06-12 03:16 GMT   |   Update On 2019-06-12 03:16 GMT
வறட்சியால் வரத்து குறைவு காரணமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, காய்கறி வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை கணிசமாக உயர்ந்துகொண்டே செல்கிறது.

குறிப்பாக கொத்தமல்லி 5 மடங்கு விலை உச்சத்தை கண்டுள்ளது. இதனால் பெரும்பாலான சில்லரை விற்பனை கடைகளில் காய்கறிகளுக்கு இலவசமாக கொத்தமல்லி வழங்குவதை பெரும்பாலான வியாபாரிகள் நிறுத்திவிட்டனர். விலை உயர்வு காரணமாக அள்ளி கொடுத்த கொத்தமல்லியை தற்போது கிள்ளி கொடுக்க கூட யாருக்கும் மனம் வருவது இல்லை என்று காய்கறி கடைகளில் பொதுமக்கள் புலம்பியவாறு செல்வதை காணமுடிகிறது.

கோடை விடுமுறைக்கு முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக திணறி வரும் குடும்ப தலைவிகளுக்கு காய்கறி விலை உயர்வு கூடுதல் தலைவலியை கொடுத்துள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

வறட்சி காரணமாக காய்கறி வரத்து கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் காய்கறிக்கு தேவைப்பாடு அதிகரித்துள்ளது. கோடை காலங்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, பெரும்பாலானோர் நீர்ச்சத்து மிக்க காய்கறியை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். காய்கறி விலை அடுத்த சில நாட்களுக்கு குறைவதற்கு வாய்ப்பு இல்லை. விலை மேலும் அதிகரிப்பதற்கு தான் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News