செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேர் கைது

Published On 2019-06-10 11:26 GMT   |   Update On 2019-06-10 11:26 GMT
ஆண்டிப்பட்டி அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வனராஜா என்பவரது வீட்டு விசேசம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் மது போதையில் மண்டபத்தின் அருகே தகராறில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தகராறில் ஈடுபட்டவர்களை சத்தம் போட்டு கலைந்து போக செய்தார். அப்போது இன்ஸ்பெக்டருக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டரை அந்த கும்பல் தாக்கியது. மேலும் அதை தடுக்க வந்த கடமலைக்குண்டு போலீஸ் ஏட்டு விக்னேஸ் என்பவரையும் தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனையடுத்து ஆண்டிப்பட்டியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தப்பி ஓடியவர்களை தேடி வந்தனர். அப்போது கடமலைக்குண்டு உப்போடை தெருவில் உள்ள ஒரு வீட்டில் அந்த கும்பல் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவை தாக்கிய வனராஜா, ஜெயராம், ஜெயராமச்சந்திரன், அழகர் ராஜா, ராஜாமணி ஆகியோரை கைது செய்து அழைத்து வந்தனர்.

போலீசார் கைது செய்ததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேனி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜன், டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த விக்னேஷ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News