செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே 2 பேரை அரிவாளால் வெட்டி பணம்-செல்போன் பறிப்பு

Published On 2019-05-02 09:42 GMT   |   Update On 2019-05-02 09:42 GMT
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 2 பேரை அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் பழவியாபாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பெரியபாளையம் அருகே தர்பூசணி பழங்களை வியாபாரத்திற்காக வாங்கி மினி டெம்போவில் சென்னை நோக்கி புறப்பட்டார். டெம்போவை டிரைவர் தங்கராஜ் ஓட்டிச்சென்றார்.

கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் அருகே வரும்போது டெம்போ திடீரென பழுதானது. இதனையடுத்து மணிகண்டன், பழங்களை மற்றொரு வாகனத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார். மெக்கானிக் வருகைக்காக டெம்போவை சாலையோரம் நிறுத்தி விட்டு அதன் அருகே மணிகண்டனும், டிரைவர் தங்கராசும் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில், அங்கு 4 மோட்டார் சைக்கிளில் 8 பேர் வந்தனர். முகத்தில் கருப்பு துணி கட்டி இருந்தனர். கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். அக்கும்பல் மணிகண்டனை கத்தியால் வெட்டி விட்டு அவரிடம் இருந்த ரொக்கப்பணம் ரூ. 6 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றது.

கவரைப் பேட்டை அடுத்த பணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மேகநாதன் (35). தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் கவரைப்பேட்டையில் இருந்து பணப்பாக்கத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் பணப்பாக்கம் மேம்பாலத்தின் அருகே அவரை வழிமறித்தனர். முகத்தை மூடி இருந்த அவர்கள் மேகநாதனிடம் இருந்த ரூ.12 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு மற்றும் செல்போனை பறித்துக்கொண்டனர்.

மோட்டார் சைக்கிளின் சாவியை தராமல் புதரில் மேகநாதன் வீசி எறிந்ததால் ஆத்திரம் அடைந்த மர்ம ஆசாமிகள் முகம் மற்றும் இடது கையில் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

படுகாயம் அடைந்த மேகநாதன் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 8 பேரும் 20 வயதில் இருந்து 24 வயதிற்கு உட்பட்டவர்கள். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள சென்னை- கொல் கத்தா தேசிய நெடுஞ்சாலையில் முகமூடி கொள்ளை யர்களால் நடந்துள்ள இந்த தொடர் வழிப்பறி சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்ட 8 பேர் கும்பலை பிடிக்க கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் 2 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் தீபன்ராஜ் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News