செய்திகள்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்? - ஜூன் 6ல் இறுதி விசாரணை

Published On 2019-04-25 08:19 GMT   |   Update On 2019-04-25 08:19 GMT
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூன் 6-ம் தேதி தொடங்க உள்ளது. #JayalalithaaAssets
சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தங்கள் மனுவில், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது என கூறியுள்ளனர்.



இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை தனது கட்சிக்காரருக்கே இருப்பதாக கூறினார். அதிமுக உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதன்பின்னர், வருமான வரித்துறை சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வேறு ஒரு வழக்கில் ஜனவரி 24ல் தாக்கல் செய்த அதே அறிக்கையை, இந்த வழக்கிலும் தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா செல்வ வரி ரூ.10.12 கோடியும், வருமான வரி ரூ.6.62 கோடி பாக்கிவைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். #JayalalithaaAssets
Tags:    

Similar News