செய்திகள்

ஆவடியில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளை

Published On 2019-03-15 09:09 GMT   |   Update On 2019-03-15 09:09 GMT
ஆவடியில் மத்திய அரசு ஊழியர் வீட்டில் ரூ.3 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநின்றவூர்:

ஆவடி, மாடர்ன்சிட்டி 3-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லோகேஷ். ஆவடியில் உள்ள மத்திய அரசின் கனரக தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை இவரது மனைவியும், மகளும் திருத்தணியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மாலை லோகேஷ் இரவு பணிக்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

இன்று காலை அவர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகை கொள்ளை போய் இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதேபோல் அருகில் பூட்டி இருந்த கோபி என்பவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் 3 கிலோ வெள்ளிப் பொருட்களை சுருட்டி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். கோபி மகளை பார்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார்.

மேலும் அதே பகுதி 5-வது தெரு, 6-வது தெருவில் உள்ள மொத்தம் 4 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து உள்ளது. அந்த வீடுகளில் ஆட்கள் இருந்ததால் மர்ம கும்பலின் கொள்ளை திட்டம் நிறைவேறவில்லை.

இதுகுறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பத்தூர் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை நடந்த லோகேஷ் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பழுதாகி உள்ளது. இதனால் கொள்ளையர்களின் உருவம் அதில் பதிவாகவில்லை.


Tags:    

Similar News