செய்திகள்

திமுக தலைமை பற்றி துரைமுருகன் பேசியதை சொல்வது அரசியல் நாகரிகம் அல்ல - சுதீஷ்

Published On 2019-03-07 08:53 GMT   |   Update On 2019-03-07 08:53 GMT
துரைமுருகன் தனது கட்சி தலைமை பற்றி பேசியதை அரசியல் நாகரிகம் கருதி நான் வெளியில் சொல்ல மாட்டேன் என தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். #Duraimurugan #LKSudhish
சென்னை:

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர் நேற்று திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்தனர். கூட்டணிக்காக தன்னை சந்தித்ததாகவும், திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டதால் சீட் இல்லை என்று கூறியதாகவும் துரைமுருகன் கூறினார். ஏற்கனவே சுதீஷ் தன்னிடம் பேசியதாகவும் கூறினார். இந்த விவகாரம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துரைமுருகனை சந்தித்தது குறித்து தேமுதிக மாவட்டச்செயலாளர்கள் அனகை முருகேசன், இளங்கோவன் ஆகியோர், சுதீஷ் முன்னிலையில் இன்று விளக்கம் அளித்தனர். அப்போது, அரசியல் காரணங்களுக்காக துரைமுருகனை சந்திக்கவில்லை என்றும், தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்ததாகவும் கூறினர்.

பின்னர் சுதீஷ் கூறியதாவது:-

நான் துரைமுருகனுடன் பலமுறை பேசியிருக்கிறேன். இருவரும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அரசியல் மட்டுமின்றி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருக்கிறோம். தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பலமுறை பேசியிருக்கிறேன். ஆனால் நேற்று பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது. அது தவறு. நான் நேற்று அவரை தொடர்பு கொண்டு பேசவில்லை. மாவட்ட செயலாளர்கள், தனிப்பட்ட காரணங்களுக்காக சந்தித்துள்ளனர்.



நான் 10 நாட்களுக்கு முன்பு துரைமுருகனிடம் பேசியதை அரசியல் நாகரிகமின்றி வெளியே கூறியுள்ளார். அதன்பின்னர் அவரிடம் நான் பேசவில்லை. அதேசமயம் அவர் என்னிடம், திமுக பற்றியும் திமுக தலைமை பற்றியும் எவ்வளவோ பேசியுள்ளார். அரசியல் நாகரிகம் கருதி அதை வெளியில் சொல்ல மாட்டேன். நாங்கள் வந்த இடம் இப்படி... அவர்கள் வந்த இடம், அவர்களின் வளர்ப்பு அப்படி.

நேற்று பிரதமரின் பிரச்சார பயணம் காரணமாக பேச்சுவார்த்தையை முடிக்க முடியவில்லை. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. ஓரிரு நாளில் தொகுதிகளை அறிவிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தேமுதிக நிர்வாகிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள இவ்வாறு பேசுவதாக துரைமுருகன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. #Duraimurugan #LKSudhish
Tags:    

Similar News