செய்திகள்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் பாராட்டு

Published On 2019-03-02 00:33 GMT   |   Update On 2019-03-02 00:33 GMT
அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார். #EdappadiPalanisamy #Ramadoss
சென்னை:

அத்திக்கடவு மற்றும் அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நனவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது. தமிழக முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் இருந்தபோதே அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அதன்பிறகு, கடந்த 60 ஆண்டுகளில் அத்திட்டம் தொடர்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக அமைக்கப்பட்ட போராட்டக்குழு தலைவராக இருந்து ஏராளமான போராட்டங்களை நடத்தி இருக்கிறேன்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிப்படையில் ஒரு விவசாயி. ஒரு விவசாயியால் தான் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையில் தான் கொங்கு மண்டல விவசாயிகளின் உணர்வுகளை மதித்து அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

60 ஆண்டுகளுக்குப் பிறகு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டம் விரைந்து முடிக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பது தான் விவசாயிகளின் விருப்பம் ஆகும். அதை உணர்ந்து இத்திட்டம் அடுத்த 2 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் கிடைக்கும் நீர் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக் குளங்கள் மற்றும் 538 நீர் நிலைகளில் நிரப்பப்படும். இதன்மூலம் அப்பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுவதுடன், 1.30 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

இத்தகைய வளமையான திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசுக்கும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் உழவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பா.ம.க. நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #EdappadiPalanisamy #Ramadoss
Tags:    

Similar News