செய்திகள்

போலி தங்க கட்டிகள் கொடுத்து ரூ.9 லட்சம் மோசடி - மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மீது புகார்

Published On 2019-02-27 12:10 GMT   |   Update On 2019-02-27 12:10 GMT
மதுரை அருகே போலி தங்க கட்டிகள் கொடுத்து ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் மருது பாண்டியன். மத்திய ரிசர்வ் போலீஸ்காரர். மங்கலப்பபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுமதி.

மருதுபாண்டியனும், சுமதியும் சேர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சந்திரமோகனின் மனைவி சுதர்சனா (27) என்பவருக்கு 4 தங்கக்கட்டிகளை ரூ. 13 லட்சம் விலை பேசி விற்றனர்.

இதற்காக முதற்கட்டமாக ரூ.9 லட்சம் பணத்தை சுதர்சனா, மருதுபாண்டியனிடம் கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.4 லட்சத்தை தரும்படி சுதர்சனாவிடம், மருதுபாண்டியன் கேட்டதால் அந்த தங்கக்கட்டிகளை விற்பனை செய்ய சுதர்சனா சென்றுள்ளார்.

அப்போது அந்த தங்கக்கட்டிகள் போலியானவை என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுதர்சனா, மருதுபாண்டியனிடம் ரூ.9 லட்சத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் மருதுபாண்டியனும், சுமதியும் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டதாக கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ்காரர் மருது பாண்டியன், சுமதி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
Tags:    

Similar News