செய்திகள்

விவசாயத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம்- நல்லக்கண்ணு

Published On 2019-02-11 09:05 GMT   |   Update On 2019-02-11 09:05 GMT
விவசாயத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாக நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். #Nallakannu
சேலம்:

சேலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் 26-வது மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று காலை சேலம் வந்த நல்லக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்க உள்ளது. இது தேர்தலை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்ட நடவடிக்கை. விவசாயிகள் மீது உண்மையான அக்கறை உள்ள அரசாக இருந்தால் விவசாயிகளின் வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது, அப்பகுதி மக்களை பார்க்க பிரதமர் மோடி வரவில்லை. தற்போது பிரதமர் மோடி தேர்தல் லாபத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.



மேகதாது பகுதியில் கர்நாடக மாநில அரசு அணை கட்டும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. காவிரி தமிழகத்திற்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. 12 மாவட்டத்திற்கு விவசாயம் மற்றும் நீராதாரமாகவும், 9 மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணை கட்டினால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாயம் இன்றி, குடிநீரின்றி பாதிக்கப்படும். பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.

தமிழகத்தில் 8 வழிச்சாலை தேவை இல்லை. ஏற்கனவே 3 வழிச்சாலை, 4 வழி பாதை உள்ளது. அதனால் பசுமை மரங்களை அழித்து உருவாக்கப்படும் 8 வழிசாலை தேவையில்லை.

விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கும். விவசாயத்தை பாதுகாக்க தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Nallakannu
Tags:    

Similar News