செய்திகள்

கடம்பூர் அருகே விவசாயி கொலை: கைதான 3 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-02-06 13:37 GMT   |   Update On 2019-02-06 13:37 GMT
கடம்பூர் அருகே பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பை விவசாயி கண்டித்ததால் அவரை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே மேலபாறைப்பட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் அண்ணாத்துரை (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ஆனந்தம்மாள். இவர்களுக்கு ஹரி கிருஷ்ணன் (31) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஹரி கிருஷ்ணன் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அண்ணாத்துரை, ஆனந்தம்மாள் ஆகிய 2 பேரும் தங்களது வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அண்ணாத்துரை தனது வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த மர்மநபர்கள் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபனா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், அண்ணாத்துரையை கொலை செய்தது, பக்கத்து ஊரான மும்மலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கொத்தனார் முத்து மாரியப்பன் (33), அவருடைய உறவினர்களான பாலசுப்பிரமணியன் என்ற சேகர் (35), கருப்பசாமி (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

ஹரிகிருஷ்ணனின் மனைவி பிரேமாவுக்கும் முத்துமாரியப்பனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. இதை கண்டித்ததால் அண்ணாதுரையை  கொலை செய்ததாக கைதான முத்து மாரியப்பன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

கைதான முத்து மாரியப்பன், பால சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று கோவில்பட்டி 2வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.  தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News