செய்திகள்

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

Published On 2019-02-01 11:16 GMT   |   Update On 2019-02-01 11:16 GMT
ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஒட்டன்சத்திரம்:

தென் தமிழகத்தின் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் உள்ளது. ஒட்டன்சத்திரம், அத்திக்கோம்பை, மார்க்கம் பட்டி, அம்பிளிக்கை, புதுசத்திரம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை இங்கு கொண்டு வருகின்றனர். கோவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் முக்கியமாக கேரளாவிற்கு அதிக அளவு காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

நாட்டு தக்காளி பெரும்பாலும் தமிழக பகுதிக்கே அனுப்பப்படுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 கிலோ கொண்ட பேட்டி ரூ.150 வரை விற்பனையானது. இருந்தபோதும் விவசாயிகளுக்கு விலை கிடைக்க வில்லை.

தற்போது விலை மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். நடவு பணி மற்றும் தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு வரும் செலவுக்குகூட பணம் கிடைக்காததால் விரக்தியில் உள்ள விவசாயிகள் தக்காளிகளை பறிக்காமல் செடியிலேயே விட்டு உள்ளனர்.

அதிக அளவு தக்காளி வரத்து வந்ததால் 14 கிலோ பெட்டி ரூ.80 முதல் ரூ.90 வரையே விலை கேட்கப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் விலை உயர்ந்தாலும், வீழ்ச்சி அடைந்தாலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதில்லை.

அரசு நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்தால் ஓரளவு சமாளிக்க முடியும். எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News