செய்திகள்

சரவணம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

Published On 2019-01-29 09:20 GMT   |   Update On 2019-01-29 09:20 GMT
சரவணம்பட்டியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

போலீசாரின் தீவிர விசாரணையில் சின்னவேடம் பட்டியில் 3 பேர் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள் கணபதி ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்த மோகித் குமார் (22), உக்கடம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த நதிஷ் குமார்(26), மணியகாரம்பாளையத்தை சேர்ந்த நவீன் குமார்(22) என்பது தெரிய வந்தது.

இவர்களில் மோகித் குமார், நவீன்குமார் இருவரும் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் ஆவார்கள். நதிஷ் குமார் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மோகித் குமார், நவீன் குமாரிடம் கொடுத்துள்ளார்.

அவர்கள் காரில் வைத்து கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக பிரித்து மாணவர்களுக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2½ கிலோ கஞ்சா, 1 கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில், கைதான 3 பேரும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தவர்கள் ஆவர்.

கோவையில் கஞ்சா விற்று வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர். இதனால் கஞ்சா விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஓன்றிரண்டு பேர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சில மாணவர்கள் தவறான நண்பர்களின் பழக்கத்தால் கஞ்சாவுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள முடியாத நிலைக்கு சென்று விடுகின்றனர்.

எனவே பெற்றோர் தங்கள் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் யார்- யாருடன் நண்பர்களாக பழகுகின்றனர்? வெளியில் அவர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளது? என்பதையும் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News