செய்திகள்

கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் - அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது

Published On 2019-01-24 11:58 GMT   |   Update On 2019-01-24 11:58 GMT
கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜேக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கோவை மாவட்டத்தில் இந்த மாவட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர். இதனால் ஒரு சில பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்றி காணப்பட்டது. ஒரு சில அரசு அலுவலகங்களும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ-ஜியோ சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சம்பத்குமார், ஸ்ரீதர், அருணாசலம், இன்னாசி முத்து, மைக்கேல்ராஜ், சாமிநாதன் உள்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் உள்பட 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்து மண்டபங்களில் தங்க வைத்தனர். முன்னதாக மறியல் போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9-ம் அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 3-வது நாளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இன்று மாவட்டம் முழுவதில் இருந்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு குவிந்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர்- பல்லடம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்து 5 திருமண மண்டபங்களில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News