ஆம் ஆத்மிக்கு வாக்களித்தால் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது என பிரசாரம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நோட்டீஸ்
- நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள்.
- நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக அவருக்கு ஜூன் 1-ந்தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. அதனைத் தொடர்ந்து அவர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
தேர்தல் பிரசாரத்தின்போது, "நீங்கள் வாக்கு செலுத்தும்போது கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டுமா? என சிந்தித்து வாக்களியுங்கள். நான் மீண்டும் ஜூன் 2-ம் தேதி சிறைக்கு செல்லவேண்டுமா, இல்லையா என்பது உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் தாமரை சின்னத்தை அழுத்தினால் நான் சிறைக்கு செல்வேன். நீங்கள் இந்தியா கூட்டணி வேட்பாளரை தேர்ந்தெடுத்தால் நான் சிறைக்கு செல்ல வேண்டியிருக்காது. எனவே சிந்தித்து வாக்களியுங்கள்" என தெரிவித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் பிரசாரம், ஆட்சிக்கு வந்தால் ஜெயிலுக்கு செல்ல வேண்டாமா? என்ற விமர்சனத்தை எழுப்பியது. அமித் ஷாவும் இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் பேச்சு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிப்பதாகும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.