10 நாட்களில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 1.50 லட்சம் பேர் விண்ணப்பம்
- வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை.
- பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதிய பாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த 6-ந்தேதி தொடங்கியது.
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.
இன்று காலை நிலவரப்படி 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். 10 நாட்களாக பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பிக்க அடுத்த மாதம் 6-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்றும், வீடுகளில் இருந்தும் விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்று மாலை வரை 91,877 பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். 55,324 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். கம்ப்யூட்டர் சயின்ஸ், பாடப்பிரிவுகளில் சேர ஆர்வமாக உள்ளனர். வேலைவாய்ப்புக்கு எளிதாக வழி வகுப்பதால் இந்த பாடங்களை தேர்வு செய்கிறார்கள்.
அதே நேரத்தில் வழக்கம் போல இ.சி.இ., இ.இ.இ. என்ஜினீய ரிங் பாடப் பிரிவுகளுக்கும் மவுசு குறையவில்லை. பொறியியல் கல்லூரிகளில் காலத்திற்கேற்ப புதியபாடப்பிரிவுகளை தொடங்குகிறார்கள்.
இந்த நிலையில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 20-ந்தேதி கடைசி நாளாகும். கடந்த ஆண்டை விட இந்த வருடம் 3 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனியார் சுயநிதி கலைக்கல்லூரிகளில் பி.காம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. தமிழ், பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ. போன்ற பாடப்பிரிவுகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.
அரசு கலைக்கல்லூரிகளில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். வணிகவியல் பாடத்தில் சதம் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பி.காம், பாடப்பிரிவுகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசு கலைக்கல்லூரிகளில் மிக குறைந்த கட்டணத்தில் சேர்ந்து படிக்கவே விரும்புகின்றனர்.
சட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடுமையான போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பி.ஏ., எல்.எல்.பி. 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகிறார்கள். 22 சட்டக் கல்லூரிகளில் 2,043 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு இதுவரையில் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., எல்.எல்.பி. (ஹானர்ஸ்) 5 ஆண்டு படிப்பு உள்ளது. இதில் உள்ள 624 மொத்த இடங்களுக்கு இதுவரையில் 3,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பிக்க 31-ந்தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.