உள்ளூர் செய்திகள்

சென்னை-புறநகர் பகுதிகளில் நிலவிய பனிமூட்டத்தால் புறநகர் ரெயில்கள் தாமதமாக இயக்கம்

Published On 2026-02-16 10:58 IST   |   Update On 2026-02-16 10:58:00 IST
  • பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
  • அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன.

சென்னை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 2 நாட்களாக பனி மூட்டம் அதிகரித்து வருவதால் பொது மக்கள் வெளியில் நடமாடவே தயங்குகிறார்கள்.

குளிருடன் பனியும் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்துவதால் வயதானவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில் இன்று பனிமூட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. மின்சார ரெயில்கள் அதிகாலையில் குறைவான வேகத்தில் இயக்கப்பட்டன. எதிரே வரக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவிற்கு பணி சூழ்ந்திருந்ததால் முகப்பு விளக்குகள் போடப்பட்டு இயக்கப்பட்டன.

இதனால் குறைந்த வேகத்திலேயே மின்சார ரெயில்கள் சென்று வந்தன. இதேபோல வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக நிலையங்களுக்கு வந்து சேர்ந்தன. சென்ட்ரல் , எழும்பூர் நிலையங்களுக்கு அதிகாலை 3 மணியில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவது வழக்கம்.

அவ்வாறு வந்த அனைத்து ரெயில்களிலும் வேகம் குறைக்கப்பட்டு இயக்கப்பட்டன. காலை 7 மணி வரை மேகத்துடன் பனிமூட்டமும் சேர்ந்து காணப்பட்டதால பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பஸ் மற்றும் கார், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலை தெளிவாக தெரியாததால் முகப்பு விளக்குகளை பயன்படுத்தி சென்றனர்.

Tags:    

Similar News