உள்ளூர் செய்திகள்

அடகு கடை பூட்டை உடைத்து 70 பவுன் தங்க நகைகள் கொள்ளை

Published On 2026-02-16 11:07 IST   |   Update On 2026-02-16 11:07:00 IST
  • கொள்ளை போன நகைகள் அனைத்தும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் என்று கூறப்படுகிறது.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் அருகே திருச்சி ரோட்டில் வசந்தா நகரில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் எதிரே ரமேஷ்குமார் (வயது48) என்பவருக்கு சொந்தமான நகை மற்றும் அடகு கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடையின் பின்புறத்திலேயே அவரது வீடும் உள்ளது. ரமேஷ்குமார் தனது கடையில் பொதுமக்கள் அடகு வைத்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை வைத்திருந்தார்.

நேற்று இரவு சிவராத்திரி என்பதால் கடைக்கு விடுமுறை விடப்பட்டது. ரமேஷ் குமாரும் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் வெள்ளலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

வீடு மற்றும் கடை பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஆட்கள் யாரும் இல்லாததை பார்த்து விட்டு இரவு 11.30 மணியளவில் கடையின் பின்புறமாக வந்துள்ளனர்.

பின்னர் கடையின் பின்புற ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கு வைக்கப்பட்டு தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அள்ளிக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த நிலையில் ரமேஷ்குமார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது நகைக்கடையின் பின்புற ஷட்டர் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்ததும் அதிர்ச்சியானார்.

உடனடியாக உள்ளே சென்று பார்த்தார். அப்போது, கடையில் இருந்த 70 பவுன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருந்தது.

உடனடியாக அவர் சம்பவம் குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார், தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்து கொண்டனர்.

மோப்பநாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து அதில் உள்ள காட்சிகளை எடுத்து கொண்டனர். மேலும் சில தடயங்களும் சிக்கி உள்ளதாக தெரிகிறது. இதனை வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளை போன நகைகள் அனைத்தும் பொதுமக்கள் அடகு வைத்த நகைகள் என்று கூறப்படுகிறது. கடையில் அதிக அளவில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருப்பதை தெரிந்த நபர்கள் தான் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News